Tuesday, May 26, 2020

தேனீக்கள் உலகக் காப்பாளன் - தேனீக்கள் தினம் 2020

றைவனின் திருவடியின் நிழலின் அழகை இலயித்துப் பாடுகையில், தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கி தேன் எடுக்க உலா வரும் வண்டுகளின் ரீங்காரம் பரவி இலங்கும் அழகிய தடாகத்தைக் காட்டாகக் காட்டுவார் பாவுக்கரசரான திருநாவுக்கரசர். 

இயற்கையானது,  பரந்து விரிந்து பூத்துக் காயாகிப் பின்னர் கனியாகி உலகுக்கும் உயிர்களுக்கும் கனிவளங்களைத் தரும் அளப்பரிய செயலைச் செய்ய பெரும்புள்ளியாய் திகழ்வது தேனீக்கள் என்னும் கணுக்காலிகளே. குமூகப் பூச்சியினமான தேனீக்களின் பங்கு ஞால இயக்கத்திற்கு மிகவும் அளப்பரியது. தேனிக்களானது மலருக்கு மலர் சென்று பூந்துகள் எனப்படும் மகரந்தத்தைச் சேகரிக்கையில் அவற்றைப் பூவிலிருந்து பிற பூவுக்குக் கடத்துவதால் பூக்கள் சூலுறுகின்றன. கருவடைந்த பூக்கள் காயாகி பின் கனிகின்றன. 

ஓய்வே இல்லாது சுறுசுறுப்பாய், வாழும் காலத்தில் தேனைத் தேடி அலையும் தேனீக்கள் 28 முதல் 35 நாட்கள் வாழ்கின்றன. விடாமுயற்சி, ஒற்றுமை, சுறுசுறுப்பு, தலைமைக்குக்  கட்டுப்படும் பாங்கினைத் தேனீக்கள் நமக்கு கற்றுக்கொடுக்கின்றன. இந்தக் கணுக்காலிகள் ஒரு லட்சம் மீட்டர் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை. உலகத்தில் மிகச் சிறந்த மருந்தாய்
விளங்கும் தேனைச் சேகரித்து அஃது உயர்ந்ததென காட்டுவதற்கே மரக் கொம்பில் தேன்கூட்டைக் கட்டி வாழ்கின்றன. 


இவ்வாறு, பல தூரம் வரை சென்று தேனை உறிஞ்சி பிற தேனீக்களின் உற்பத்திக்குப் பாடுபடும் தேனீக்கள் இன்று வந்த வழி அறியாது, திணறி தலை கிருகிருத்து, இறக்கும் நிலையில் இருக்கின்றன. மனிதர்களின் அளவில்லாத சுயநலப் போக்கிற்காகத் தாவரங்கள் மீது தெளிக்கப்படும் இராசயன பூச்சிக் கொல்லிகள் உலக இயக்கத்திற்கு ஊன்றுகோளாய் விளங்கும் தேனீக்களைக் கிட்டத்தட்ட சுயநினைவை இழக்கச்செய்து தம் கூட்டிற்குச் செல்ல வழி தெரியாமல் வாடி இறக்கச் செய்கின்றன. அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இன்று தேனீக்கள் ! முன்பு ஒரு மன்னனையோ அல்லது தலைவனையோ சிறப்பித்துக் கூறுகையில் அவன் தேனீக்கள் நிறைந்த புலத்தைச் சேர்ந்தவன் என ஒப்பிட்டுக் காட்டுவதுண்டு. தேன் நிறைந்த இடம் என்பது ஒரு இருப்பிடத்தின் வளத்தைக் காட்டக் கூடியதாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
குறுந்தொகை- தேவகுலத்தார்


என்கிற குறுந்தொகை பூமி, வானம், பரந்த கடலைவிடவும் பெரியதாகவும் உயர்ந்ததாகவும் ஆழமானதாகவும் தேனீக்கள் தேன் எடுக்கும் நாடனோடு கொண்ட காதல் என பகர்கின்றது. தலைவனின் வளமையைக் காட்டும் பொருட்டுத் தேனீக்கள் நிறைந்த நாடன் என்பதில், தேனீக்கள் வளப்பத்திற்கு வித்திடும் பூச்சியினம் என்பதனை நம்மால் அறிய முடிகின்றது. இருந்தும், இன்று அதன் அழிவால் உலகம் செயலை இழக்கவும் நேரிடலாம் என்பதே உண்மை. மகரந்த சேர்க்கை நடவாது, தாவரங்கள் இனப்பெருக்கம் தடைப்படும். 

இளவேனிற் காலத்தில் மரங்களெல்லாம் பூத்துக் காய்த்துக் குலுங்கும் அரிய காட்சியினை நாம் இழக்கப் போகின்றோம். தேனீக்கள் உலகக் காப்பாளன். மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழாது, செயற்கை தன்மைக்குப் புலம் பெயர்வதால், பெரும் அனர்த்தத்தை உருவாக்குகிறார்கள். தேனீ நண்பன் வெறும் பூச்சியினம் அன்று. அவன்  தாவரங்களின் சேர்க்கைக்கு அம்பெய்தும் மது உண்ணும் மன்மதனாவான். 

மனித இனம் தேனீக்களுக்கு இழைக்கும் தீங்கினைச் சுட்டிக் காட்டுவதற்காக இன்று தேனீக்களுக்கும் விழா எடுக்க வேண்டியுள்ளது. தேனீக்களைக் காப்போம். உலகத்தை இயல்பாக இயங்கவிடுவோம். தேனீக்கள் தினம் என்று ஒரு நாளோடு தேனீக்களை அடக்கிவிடாது, அதனை உயிர் கொண்டு வாழவிடுவோம். தேனீக்கள் தின வாழ்த்துகள்.

No comments:

Post a Comment